இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மலர்களால் அவரை வழிபட்டனர். தேவகன்னியர் வராததைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப இத்தலத்திற்கு வந்த காமதேனு இறைவனை வழிபட்டு நின்றது. மலர்கள் வராததை அறிந்த இந்திரன் தனது வெள்ளை யானையை அனுப்ப, அதுவும் இத்தலத்து இறைவனை வழிபட்டு இங்கேயே நின்று விட்டது. பெண் - தேவகன்னியர், ஆ - காமதேனு, கடம் - வெள்ளை யானை இத்தலத்து இறைவனை பூசை செய்ததால் 'பெண்ணாகடம்' என்று பெயர் பெற்றது. பின்னர் தேவேந்திரன் தானே புறப்பட்டு வந்து, தானும் இறைவனை வழிபட்டான் என்று தல வரலாறு கூறுகிறது.
மூலவர் சுயம்பு லிங்கம். சதுர வடிவ ஆவுடையார். பெரிய லிங்கம். கர்ப்பகிருகத்தின் வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குவதற்கு சன்னல்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அம்பிகை பெயருக்கேற்ற அழகிய வடிவத்துடன் சுமார் 5 அடி உயரத்துடன் அழகாக காட்சி தருகிறாள். பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தடுக்க நந்தி திரும்பி நிற்கின்றது.
மூலவரின் விமானம் யானை அமர்ந்திருப்பது (பின்புறம்) போன்ற தோற்றம் உடையதால் 'தூங்கானை மாடம்' என்று அழைக்கப்பட்டது. இத்தகைய விமான அமைப்பிற்கு 'கஜபிருஷ்ட விமானம்' என்று பெயர். மூலஸ்தானத்திற்கு பின்புறம் கட்டுமலைமேல் சௌந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. இது சீர்காழியில் உள்ள சட்டநாதர் சன்னதியை நினைவுப்படுத்துவது போல் உள்ளது.
சந்தானக் குரவர்களுள் ஒருவரான மெய்க்கண்டாரின் அவதாரத் தலம். அவரது தந்தை அச்சுத களப்பாளர் வாழ்ந்த ஊர். ஊருக்கு மேற்கில் அவரது பெயரில் 'களப்பாளர் மேடு' என்னும் இடம் உள்ளது. அச்சுத களப்பாளருக்கு பிள்ளையில்லாதக் குறையைப் போக்க, திருத்துறையூரில் இருந்த அவரது தீட்சாகுருவான அருள்நந்தி சிவாச்சாரியார் தேவாரத்தில் கயிறு சார்த்திப் பார்த்தார். திருவெண்காட்டுப் பதிகம்வர, அங்கு சென்று முக்குள நீரில் மூழ்கி, நோன்பு இருக்குமாறு கூறினார். அதன் பயனாக அச்சுத களப்பாளருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருவெண்காட்டு இறைவன் அருளால் பிறந்த குழந்தையாதலால் சுவேதவனப் பெருமாள் என்று பெயரிட்டனர். இக்குழந்தையே சைவ சித்தாந்தங்கள் பதினான்கினுள் முதன்மையான சிவஞான போதத்தை அருளிய மெய்கண்டார்.
சைவ சமயத்திற்குத் திரும்பிய திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனை வேண்டி, தமது தோளின்மேல் சூலக்குறியும், இடபக் குறியும் பொறித்தருளப் பெற்றத் தலம். கலிக்கம்ப நாயனார் வாழ்ந்து வீடுபேறு பெற்ற தலம். மற்றொரு சந்தானக் குரவரான மறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுதான். அவரது பெயரில் தனி மடம் ஒன்று உள்ளது.
இத்தலத்திற்கு சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இதில் அப்பர் பாடிய பதிகத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையில் நடை திறந்திருக்கும். தொடர்பு எண்: 98425 64768, 04143-222788. |